Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, 24 March 2011

பிரத்யங்கரா தேவி : அய்யாவடி


அய்யாவடி




தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இருக்கும் ஒரு கிராமம் ஆகும். தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது.
இங்குதான் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள். சக்தியின் உக்கிரமான வடிவம்தான் மஹா பிரத்யங்கரா. இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்.
நரசிம்மர் பிரஹலாதனுக்காக இரண்யனை வதைக்க சிங்க உருவமெடுத்தபோது, அதிலிருந்து விடுபட முடியாமல் தன் வேகத்தைக் குறைக்க முடியாமல் நல்லவர்களையும் துன்புறுத்த துவங்கியபோது, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மமூர்த்தியின் உக்கிரத்தை தடுப்பதற்காக பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர். அந்த சரப வடிவத்தின் இறக்கைப் பக்கம் இருப்பவள் இந்த பிரத்யங்கரா தேவி.
இந்த பிரத்யங்கரா சிவனின் ஒரு பக்க சக்தி. அந்த சக்தியை தனியே வைத்து, அதற்கு தனியாக கோயில் கட்டி அய்யாவாடி என்கிற ஊரில், மக்கள் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். ஐவர்பாடி என்று பெயர் பெற்ற இந்த கிராமம் தற்போது அய்யாவாடி என்றழைக்கப்படுகிறது. இங்குதான் நம் பிரத்யங்கரா தேவி வாசம் செய்து வருகிறாள்.

இந்தக் கோவிலின் தொன்மையைப் பற்றியும், பழமையைப் பற்றியும், வழிவழியாக பல விஷயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.
பஞ்சபாண்டவர்கள் இந்த இடத்திற்கு வந்து தரிசனம் செய்து, பிறகு அவர்கள் தங்களுடைய ஆயுதங்களை இங்குள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு தென்தேசம் சஞ்சாரம் செய்யப்போனார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தரஜித் இராவணனுக்குத் துணையாக தேவர்களை அடக்க நிகும்பலை யாகம் செய்தான். அவ்வாறு அவன் நிகும்பலை யாகம் செய்த இடம் இந்த அய்யாவாடிதான் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மிகச்சிறப்பாக ஹோமம் நடைபெறுகிறது. அந்த ஹோமத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள். 
உக்கிரமான
பணம் படைத்தவர்களால், அதிக உடல்பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுதலும் அதிகம் நடக்கிறது. அப்படி வதைபடுபவர்களால் பதிலுக்கு எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகாரத்தை, உடல்பலத்தை, பணபலத்தை எதிர்க்க பல பேருக்கு சக்தியில்லை. அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிறார்கள். அப்படி முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது அய்யாவாடியிலுள்ள பிரத்யங்கரா தேவி கோயில்.
இந்த மஹா பிரத்யங்கரா தேவி கைமேல் பலன் தருவாள். உங்களை அழிக்க எவர் நினைத்தாலும், உங்களை வதைக்க எவர் முயன்றாலும் இங்கு வந்து ஒரு நிமிடம் மனம் கூப்பி தேவியின் பெயரைச் சொல்லி அழைத்து எனக்கு இந்த துன்பம் இருக்கிறது. தயவு செய்து நீக்கி விடு என்று சொன்னால் போதும். உங்கள் எதிரிகளை வெகுநிச்சயமாய் இவள் துவம்சம் செய்வாள். உங்கள் பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்பதுதான் இதில் மிக முக்கியம்.

ஒவ்வொரு அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் நடக்கும் ஹோமத்தின் உச்சகட்டமாக, வடமிளகாயை அம்பாளுக்கு நிவேதனம் செய்வார்கள். கூடைகூடையாய் மிளகாயைக் கொட்டுவார்கள். ஆனாலும் ஒரு சிறுகமறல் கூட அங்கு எழாது. சகலமும் அவள் உள்வாங்கிக் கொண்டு விடுகிறாள் என்று அங்குள்ளோர் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment